×

சிவகளை அருகே வலப்பான்பிள்ளை திரட்டில் அகழாய்வு பணி மண்பாண்ட பொருட்களின் உடைந்த துண்டுகள் கண்டுபிடிப்பு

ஏரல்: சிவகளை அருகே வலப்பான்பிள்ளை திரட்டில் நடந்து வரும் அகழாய்வு பணியில் பழங்குடியேற்றங்கள் இருந்ததற்கான தடயங்களாக மண்பாண்ட பொருட்களின் ஓடுகள் உடைந்த நிலையில் கிடைத்து வருகிறது.  தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சிவகளையில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பரம்பு பகுதியில் முதுமக்கள் தாழிகள், எடை குண்டுகள், பாறை கிண்ணம், பானை ஓவியம், நடுக்கல், கல்தூண், புடைப்பு சிற்பம், வட்டக்கல், இரும்பிலான ஆயுதங்கள் உட்பட தொல்லியல் களம் கண்டறியப்பட்டதையடுத்து கடந்த மே 25ம் தேதி தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தன் தலைமையில் அகழாய்வு பணிகள் தொடங்கின.

கடந்த 50 நாட்களாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 20க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த முதுமக்கள் தாழிகள் விரைவில் வெளியே எடுக்கப்பட்டு அதற்குள் இருக்கும் பொருட்கள் அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது. இதேபோல் சிவகளையின் வடக்கே மிக நீளமான உச்சபரம்பு பகுதியானது சிவகளை கீழகுளத்திலிருந்து ஆரம்பித்து மேற்கே வல்லநாடு மற்றும் ஆதிச்சநல்லூர் வரை பல்லாயிரக்கணக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

சிவகளையை சுற்றி பெரிய அளவில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் புதைமேடுகள் காணப்படுவதால் பழங்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த வாழ்விடப் பகுதியான தரிசுகுளம், செக்கடி மரங்களமேடு, சாஸ்தாகோயில் திரடு, வெள்ளத்திரடு, வலப்பான்பிள்ளை திரடு, ஆவரங்காடு மற்றும் பொட்டல் பகுதிகளில் உள்ள திரடுகளிலும் பழங்குடியேற்றங்கள் இருந்ததற்கான தடயங்களை ஆசிரியர் மாணிக்கம் கண்டறிந்து அதனை தொல்லியல் துறையினருக்கு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சிவகளை பரம்பு பகுதியில் இருந்து தென்புறம் உள்ள  வலப்பான்பிள்ளை திரட்டு பகுதியில் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியை கண்டறிய கடந்த ஜூன் 28ம் தேதி அகழாய்வு தொடங்கப்பட்டது. 17 நாட்களாக நடந்து வரும் இந்த பணியில் முதற்கட்டமாக மூன்று குழிகள் அமைக்கப்பட்டன. இக்குழிகளிலிருந்து உடைந்த மண்பாண்ட பொருட்களின் பாகங்கள் சிறு, சிறு துண்டுகளாக கிடைத்து வருகிறது. இதனை தொல்லியல்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். மேலும் காரை எனப்படும் சுண்ணாம்பு கட்டிகளும் கிடைத்து வருகின்றன. இந்த திரட்டில் காணப்படும் மண் சாம்பல் நிறத்தில் இருப்பதாலும், பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்திய மண்பாண்ட ஓடுகள் சிதைந்த துண்டுகளாக கிடைத்து வருவதாலும் இது வாழ்விடப்பகுதி என அறியப்பட்டுள்ளது.

இன்னும் பல அடி தோண்டும் போது பல அரிய வகை பொருட்கள் இதில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதில் கிடைத்துள்ள உடைந்த நிலையில் உள்ள மண்பாண்ட துண்டு ஓடுகளை முறைப்படி அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்தபின் இது எத்தனை ஆண்டுகளுக்கு முன் உள்ள ஓடுகள் என தெரியவரும் என கூறப்படுகிறது.


Tags : Sivakala Discovery , Sivakalai, Valappanpillai, excavation work, pottery
× RELATED “விருதுநகரில் 62 தனியார் பள்ளிப்...